"மானுட குலம் உய்ய அவ்வப்போது மகத்தான மாமனிதர்கள் தோன்றுவதுண்டு. அம்மனிதர்களின் வருகையினால் மானுடகுலம் ஆன்மீக ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் பல்வேறு படிநிலைகளுக்கு உயரும். தன்னலமற்ற அம்மாமனிதர்கள் மகான்களாகவும், ஞானிகளாகவும், யோகபுருஷர்களாகவும் போற்றப்படுகின்றனர். உலகெங்கிலும் இவ்வாறு பல மகான்கள், அவதார புருஷர்கள், ஒப்பற்ற கவிஞர்கள், அரசியல் சாதனையாளர்கள், அறிஞர்கள் எனப் பலர் தோன்றிய நூற்றாண்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு. அந்த நூற்றாண்டில் தான் இந்தியாவில் பல அவதார புருஷர்கள், அறிஞர்கள், கவிஞர்கள் தோன்றிப் புவியை மேம்படுத்தினர். அதே நூற்றாண்டில் தான், பிரான்ஸில் ஒரு தெய்வீகக் குழந்தையின் திரு அவதாரமும் நிகழ்ந்தது. அவர் தான் “மதர்” என்றும், “ஸ்ரீ அன்னை” என்றும் பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீ அரவிந்த அன்னை.
ஸ்ரீ அன்னையின் விரிவான வாழ்க்கை வரலாற்றினை ஏற்கனவே நான் எழுதியிருந்தபோதிலும், அனைவரும் எளிமையாக வாசிக்கும் வகையில் சுருக்கமான ஒரு நூலும் வேண்டும் என்று, தமிழ் ஆடியோ புக்ஸ் மூலம் ஆன்மிகம் பரப்பு நற்பணியைச் செய்துகொண்டிருக்கும் திரு ஸ்ரீ ஸ்ரீனிவாஸா அவர்கள் கேட்டுக் கொண்டார். அவரது அன்பு வேண்டுகோளின்படி உருவானதுதான் இந்த மின்னூல்.
மனம் ஒருமைப்பட்டு இந்த நூலை வாசிக்கும் போது ஸ்ரீ அன்னையின் அருகாமையை நீங்கள் உணர முடியும்.
ஸ்ரீ அன்னையின் அருளொளி இந்த நூலை வாசிப்பவர்கள் அனைவருக்கும் கிட்டட்டும்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய
ஓம் ஸ்ரீ ஆனந்தமயி; ஓம் ஸ்ரீ சைதன்ய மயி; ஓம் ஸ்ரீ சத்ய மயி பரமே!
என்றும் அன்புன்
பா.சு.ரமணன்"