"குணங்குடி மஸ்தான் சாகிபுவின் காலம் கிபி 1788 – 1835 க்கு இடைப்பட்டது. அரபியிலும் தமிழிலும் புலமை பெற்றவர். இஸ்லாமிய மார்க்கப்பிரிவுகளில் ஒன்றான காதிரிய்யா தரீகாவின் செயக்ப்துல் காதிரிலெப்பை ஆலிமிடம் மார்க்க கல்வி பெற்றார். திரிசிரபுரத்து ஆலிம் மௌலவி ஷாம் சாகிபுவிடம் தீட்சைபெற்றுக் கொண்டு தொண்டியில் நான்கு மாதங்கள் கல்வத்து இருந்தார். தொண்டி மரைக்காயர் தோப்பில் யோக நிஷ்டையிலும் ஆழ்ந்தார். சிக்கந்தர் மலைக்குகையில் தலை கீழ் கால் மேலான சிரசாசனம் இருந்தார். பல ஊர்களுக்கு நாடோடியாக அலைந்தார். இறுதிக்கால 12 ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்தார். தொண்டியூர்க்காரரான இவர் வாழ்ந்த இடம்தான் தொண்டியார் பேட்டை. இதுவே பிற்காலத்தில் தண்டையார் பேட்டையானது. இராயபுரத்தில் இவரது அடக்கவிடம் உள்ளது. தமிழகத்தில் பிறந்து வாழ்ந்த காதிரிய்யா தரீகா ஞானப்பாட்டையாளர் முஹியத்தீன் அப்துல்காதிர் ஜீலானியை தனது ஞானகுருவாக ஏற்றுக் கொண்டார்.குணங்குடியார் இசுலாமிய சூபி ஞானியாக அறியப்படுகிறார். குணங்குடி மஸ்தான் சாகிபு எழுதிய தற்போது கிடைக்கும் எழுத்துக்கள் 24 கீர்த்தனைகள் உட்பட 1057 பாடல்களாகும்.
இவ்வொலி நூலில் கீர்த்தனைகள் தவிர அவருடைய பிற பாடல்கள் விருத்தவோசையில் இடம் பெறுகின்றன. யாப்போசை மற்றும் விருத்தவோசை மீட்டெடுப்பில் முனைவர் ரமணியின் படைப்பில் இன்னுமொரு நேர்த்தியான படைப்பு இந்த ஒலிநூல்.
குரு வணக்கம் பகுதி முஹியத்தீன் அப்துல்காதிர் ஜீலானியை முன்னிறுத்தி பத்து பாடல் பகுதிகளைக் கொண்டது. முகியத்தீன் சதகம் 100 பாடல்களைக் கொண்டது. முன்னிலை குருவான முகியத்தீன் ஆண்டகையிடம் குறையிரந்து உரையாடும் பாடல்களாக இவை அமைந்துள்ளன. அகத்தீசன் சதகமும் 100 பாடல்களாலானது. மகமூது நபியாண்டவரை சுகானுபவமுறதுதித்தல், தவமே பெறவேண்டுமெனல், குறையிரங்கி உரைத்தல் வானருள் பெற்றோர் மனநிலை உரைத்தல், ஆனந்தகளிப்பு பாடல்பகுதிகளும் உண்டு. இதைதவிர இரண்டிரண்டு அடிகளாலான கண்ணிவகைப்பாடல்களும், பல்வித மனநிலைகளையும், உணர்வுச்சூழல்களையும் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துகின்றன. நிராமயக்கண்ணி, பராபரக்கண்ணி, றகுமான்கண்ணி, எக்காலக்கண்ணி, கண்மணிமாலைக் கண்ணி, மனோன்மணிகண்ணி, நந்தீஸ்வரக்கண்ணி எனப் பல வகையினங்களாக இக்கண்ணிகள் அமைந்துள்ளன."